KALAITHIRUVIZHAVIRKU SENRU VANTHA NIGAZHVU KATTURAI

 


கலைத்திருவிழா கட்டுரை

உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

முன்னுரை:

”கலைத்திருவிழா என் மனதைக் கவர்ந்திழுத்தது”

    குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:

     மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? அந்தந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

”அனைத்து கலைகளும் சங்கமித்தது

                என் மனமும் அங்கேயே நிலையாய் நின்றது”

      கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. மேலும் அரங்குகளின் அமைப்பு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

     கலைத்திருவிழா நிகழிடத்தில் விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

”மனதைக் கவரும் மயிலாட்டம்

                நம்மையும் ஆடத்தூண்டும் கரகாட்டம் ”

      எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது.

பேச்சரங்கம்:

    கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். கலைத்திருவிழாவிற்கு வந்த மக்களில் பலர் மெய்மறந்து பேச்சாளர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்றனர். நானும் என் குடும்பத்தினரும் கூட பேச்சரங்கத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டு விட்டு வந்தோம்.

முடிவுரை:

”ஆவலுடன் அங்கு சென்றோம்

                       அங்கிருந்து  வர மனமில்லாமல் வந்தோம்”

         இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

 பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை