உலக தண்ணீர் தினம்
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு”
என்கிறார் திருவள்ளுவர். மனிதருள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நீரில்லாமல் அவரது வாழ்க்கையில் நடைபெறாது அதோடன்றி இவ்வுலகில் ஒழுக்கமும் நிலைபெறாது என்கிறார் திருவள்ளுவர்.
அத்தகைய நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தவே ஆண்டுதோறும் மார்ச் 22.ஆம் நாள் உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் உட்பட உலகின் பல முதன்மை நாகரிகங்களும் நீரை அடிப்படையாகக் கொண்டே வளர்ச்சி பெற்றுள்ளன.
பூமியில் எல்லா உயிரினங்களும் தோன்றும் முன்பே நீரானது தோன்றியுள்ளது. பொதுவாக பூமியில் நிலப்பரப்பானது வெறும் 30% மட்டுமே உள்ளது. மீதமிருக்கும் எழுபது சதவீதமும் நீர்ப்பரப்பாக இருந்தாலும் அதில் 97.5 சதவீதம் உப்பு நீராகத் தான் காணப்படுகிறது. இதில் நிலத்தடி நீர் 2.5 சதவீதமாக உள்ளது போக மீதம் 0.26 சதவீதம் நன்னீர் பரப்பாகும். இந்த நீரைத்தான் உலகில் உள்ள மக்கள் அனைவரும் தமது தேவைக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் 110 கோடிக்கும் மேற்பட்ட மக்களில் 80 நாடுகளில் வாழும் 40 சதவீத மக்களுக்குத் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும், அதிகரித்து வரும் மனிதகுலத்திற்கு எதிர் காலங்களில் நீர் ஒரு சவாலாகவும் அமையலாம் என கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அண்மையில் அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டில் நீரியல் தின நிகழ்வின் போது ஒரு சொட்டு தண்ணீருக்கான விலை ஒரு சொட்டு பெட்ரோலின் விலையை விட அதிகரிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நீரின் இன்றியமையாமையை மக்கள் உணராமல் இருப்பதாகும்.
இந்து சமுத்திரத்தின் முத்து என்று இலங்கை அழைக்கப்பட்டாலும், நான்கு புறமும் கடலால் சூழப்பட்டு இருந்தாலும் அங்கு பருகப்படும் குடிநீரானது ஆறுகள் ,ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
மனித உடலில் 60 சதவீதத்திற்கும் மேல் நீர் உள்ளது அதில் 2.7 லிட்டர் என மிகச்சிறிய நீரின் அளவு குறைந்தாலும் மனிதனின் உடலில் மன அழுத்தம், உடல் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் வயிற்றுப்புண் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் நீரின் இன்றியமையாத நிலைமை தெள்ளத் தெளிவாகப் புலப்படுகின்றது.
அதனடிப்படையில் நீர்வள பாதுகாப்பை வலியுறுத்தும் அதற்காகவே சர்வதேச நீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது 1992 பிரேசிலில் கூடிய சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பேரவை கூட்டத்தொடரில் 1993 ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதியை உலக நீர் நாளாகக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
நீரின் இன்றியமையாமையை கருத்தில் கொண்டே தமிழகத்தை ஆண்ட பழம்பெரும் வேந்தர்களும் பல நீர் நிலைகளையும் அணைகளையும் உருவாக்கி மக்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்து வந்தனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது கரிகாலன் கட்டிய கல்லணை ஆகும். திருச்சிக்கு மிக அருகில் கட்டப்பட்ட கல்லணையானது பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் எந்தவிதப் பழுதும் இன்றி மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் எனும் நகரமானது ஒரு துளி நீர் கூட இல்லாத நகரமாக உருவெடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நீரின் முக்கியத்துவத்தை உணராமல் நீரை வீணடிப்பதை தவிர்த்து நீர்நிலைகளில் சீர்படுத்தி நீரைச் சேமிக்கும் வழிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.