PONGAL SPECIAL ESSAY& SPECIAL QUIZ WITH E-CERTIFICATE

 தமிழர் திருநாள்


(கட்டுரையின் இறுதியில் வினாடி வினா இணைப்பு உள்ளது.கட்டுரையை நன்கு படித்தபிறகு வினாடிவினாவில் பங்கேற்கவும்.வினாக்கள் அனைத்துமே கட்டுரையில் இருந்தே இடம்பெறும்)

       தைப்பொங்கல்,தமிழர் திருநாள், அறுவடைத் திருநாள், உழைப்பாளர் திருநாள்  என்றெல்லாம் போற்றப்படக் கூடிய  விழாவே பொங்கல் விழாவாகும்.

 தமிழரின் அறத்தொழிலான வேளாண்மையில், ஓர் இன்றியமையாத நாளாக இந்நாள் கருதப்படுகிறது.ஆண்டு முழுவதும் உழைத்த உழவர்கள், தங்களது உழைப்பின் பயனை அறுவடை செய்யும் நாள் இந்நாள் ஆகும். எனவே மற்ற திருவிழாக்களை விட இத்திருநாள் தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

      தமிழர்கள் இயற்கை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பதைப்

 பறைசாற்றும் விதமாகவே இந்நாள் அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் கூட, இயற்கை வழிபாட்டினைப் பற்றி,


       ”திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” என்றும்,


        “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்றும்


குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தின்  மங்கல வாழ்த்துப் பாடலாக இதையே அமைத்துள்ளார்.

           சாதி, மதங்களைக் கடந்து  அனேக தமிழ் மக்களால் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.   தமிழர்கள் வாணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும், தமிழர் திருநாளை மறவாமல் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ரியூனியன் தீவு, இங்கிலாந்து, பிரான்ஸ்  மற்றும் தமிழர் வாழும் மேலைத்தேய நாடுகளில், மகரவிழா என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.

           பொங்கல் திருவிழா என்பதற்கு உண்ணும் பொங்கல் எனப் பொருள் கொள்ளலாகாது.மகிழ்ச்சி பொங்கி வரும் திருநாள்  என்று உணர்தலே பொருத்தமானதாக இருக்கும்.

         தமிழர் திருநாள் தமிழ்நாட்டில் 4 நாள் பெருவிழாவகக் கொண்டாடப் படுகிறது.முதல்நாள் போகி(போக்கி) ஆகும்.அதாவது,தீயில் தேவையற்றவை எரிந்து பொசுங்குவது போல மனதில் உள்ள தீய எண்ணங்களும்,துன்பங்களும் மறையும் என்ற மனவலிமையைக் கொடுக்கக் கூடிய நாள் இதுவாகும்.ஆனால் காற்றுமாசுபாட்டால்,தேவையற்ற விளைவுகள் ஏற்படும் அளவிற்கு எரிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுதல் வருந்தத்தக்கது.இது மார்கழி மாதத்தின் இறுதி நாளாகும்.

          அடுத்தது தைத்திங்கள் முதல் நாள் தைப்பொங்கலாகும்.பொங்கல் திருநாளின் இன்றியமையா நாள் இதுவாகும்.அறுவடைசெய்த நெல்லை, அரிசியாக்கி புதுப்பானையில்,பால்,வெல்லம் முதலியவை சேர்த்து,அரிசி வெந்து பானையிலிருந்து பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல்

என அகமகிழ்ந்து ஒலி எழுப்புவர்.பின்னர் உழவுக்கு உதவிய பகலவனுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லும் வகையில் மஞ்சள்,கரும்பு முதலியவற்றைப் படைத்து வழிபடுவர்.இம்முறை இன்றும்தொடர்வது மகிழ்ச்சியளிக்கக் கூடியது.

       மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கலாகும்.நிலத்தை உழுவதில் பெரும்பங்கு ஆற்றி உதவுபவை மாடுகள் அல்லவா?இயற்கையை வழிபட்டதற்கு நிகராக மாடுகளையும் குளிப்பாட்டி,அலங்கரித்து,பல சத்துமிக்க இலைதழைகளை அவற்றிற்குத் தந்து,குடும்பத்தோடு அவற்றை வழிபட்டு,அவற்றுடன் விளையாடியும் மகிழ்வர்.

        நான்காம் நாள் காணும் பொங்கலாகும்.அறுவடையில் ஈட்டிய பொருளை உறவினருக்கும் பகிர்ந்தளித்து,உழவில் ஆழ்ந்திருந்தபோது உறவினர்களைக் காணாத ஏக்கம் தீரும் வகையில்,அவர்களைக் கண்டு மகிழ்ந்து குசலங்கள் பேசி வாழ்தலே காணும் பொங்கலாகும்.ஆனால் இன்றளவில் காணும் பொங்கல் என்பது சுற்றுலா தலங்களுக்குச் சென்று கேளிக்கையில் ஈடுபடுவது என்ற நிலைக்கு மாறிவிட்டது ஏற்புடையதன்று.

        நாம் உண்ணும் உணவை விளைவித்துத் தந்து,நமக்கு உயிர்தரும் உழவர்களுக்கு நன்றிக்கடனோடு செயல்படுவோம்!!!
வினாடி வினாவில் பங்கேற்க👇👇


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை