10 TH STD TAMIL POTHUKKATTURAIKAL



 

பொதுக்கட்டுரைகள்

10.ஆம் வகுப்பு – தமிழ் (வினா எண்: 45 அ மறும் ஆ)

1. முன்னுரை- தமிழகம் தந்த தவப்புதல்வர் - மொழிப்பற்று - பொதுவாழ்வு - தூய்மை- எளிமை -மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை  . கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.

தலைப்பு: தமிழகத் தவப்புதல்வர்

முன்னுரை:

வாழ்ந்தவர் கோடி! மறைந்தவர் கோடி!

           மக்கள் மனதில் நிலையாய் நிற்பவர் யாரோ?”

     படிப்பால் உயர்ந்தோர், உழைப்பால் சிறந்தோர் எனப் பாரில் பலர் உருவாகிச் சிறப்பு பெறுகின்றனர். படிக்காத மேதை என்றும்,கல்விக்கண்திறந்தவர் என்றும் போற்றப்பட்ட, தமிழ்நாட்டில் தோன்றிய தவப்புதல்வர் பற்றிக் காண்போமா?

பிறப்பும் இளமையும்:

விருதுப்பட்டிக்கு இவரை விட பெரிய விருது தேவையா?”

     விருதுப்பட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகரில் குமாரசாமி -சிவகாமி அம்மான் தம்பதியரின் குமாரனாக 15 -7-1903 இல் காமராசர் பிறந்தார். 1908இல் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் ஏனாதி நாயனார் வித்தியாசாலையிலும் கல்வி பயின்றார். இவர் 1914 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் படிப்பை நிறுத்திக் கொண்டாலும் தினசரி செய்திகளைப் படித்து உலக நிகழ்வுகளை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார்.

நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்:

      சுதந்திரப்போராட்டக் கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் சொற்பொழிவுகளை தவறாமல் கேட்பார் .1919 இல் தமது பதினாறாம் வயதில் காந்தியடிகள் அழைப்பை ஏற்று,ரௌலட் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சியின், முழுநேர ஊழியராக 1920ல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திலும் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மொழிவாரி மாநிலங்கள் பிரித்தபோது, பெரும் பங்காற்றினார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பல முறை சிறை சென்றார்.

தூய்மையும் எளிமையும்:

எளிமையின் இலக்கணம்இவர்

  மனதில் கொண்டது பெருங்குணம்

     பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட காமராசர்,"இவ்விழாவிற்கு ஏன் இத்தனை அலங்காரத் தோரணங்கள்? இந்த பையன் தலைக்கு எண்ணெய் தேய்க்கல. இந்த பொண்ணு கிழிந்த ஆடை போட்டு இருக்கே.இவர்களுக்கு உதவலாமே" என்று ஆதங்கப்பட்டார். தமக்கென்று அணிந்திருக்கும் உடைகளைத் தவிர ஒரு சதுர அடிநிலத்தைக் கூட வாங்கிவைத்திருக்காத உத்தமராக,எளிமையானவராக  திகழ்ந்தவர் காமராஜர்,

மக்கள் பணியே மகத்தான பணி:

     1954 இல்முதல்வராகப் பொறுப்பேற்று, ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கூடங்கள் அமைத்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார். நாட்டில் பல தொழிற்சாலைகளை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் சுமார் 18 மணி நேரம் உழைத்தார்.காலை மாலை இரவெனினும் மக்களைச் சந்திப்பார். காலையில் விழித்து எழுந்ததும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிப்பார்.

முடிவுரை:

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

                                           இவன்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்

      'கல்விக் கண் திறந்த காமராசர் 'எனப் போற்றப்பட்டவர். தான் பதவியேற்கும்போது "ஏழைகளின் துயர் தீர்க்கவே இந்த பதவியை நான் ஏற்கிறேன் .மக்களின் துயரத்தை தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பதவியைத் தூக்கி எறிவேன்" எனக்கூறிய ஒப்பற்ற தலைவர் இவரே.

2. விசும்பின் துளியும் பசும்புல் தலையும்- காற்று மாசு -பசுமையைக் காப்போம்- மரம் நமக்கு வரம் - மழை நீர் உயிர் நீர்,   கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.

தலைப்பு:  இயற்கையைப் போற்று (சுற்றுச்சூழல் பாதுகாப்பு)

முன்னுரை:

              நமது சுற்றுச்சூழல் உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது. மழையும் காற்றும் மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவா? அத்தகைய வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்,வளங்களின் தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விசும்பின் துளியும் பசும்புல் தலையும்:

                                                  ”விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே

                                                    பசும்புல் தலைகாண் பரிது"

     என்கிறார் வள்ளுவர் .மாதம் மும்மாரி பொழிந்தது இந்நாடு.வளம்மிக்க இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.. வெப்பமயமாதலும் நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில் பெருந்தடையாக உள்ளன.அதோடன்றி, மரங்கள் அதிக அளவில் வெட்டப் படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசு:

உங்கள் சுவாசத்தை நிறுத்தும் முன்

                                                       காற்று மாசுபாட்டை நிறுத்துங்கள்

    மக்கள் தொகைப் பெருக்கம், மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு, வாகனப்புகை போன்றவற்றால் நிலம், நீர்,காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி, காற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம்.

பசுமையைக் காப்போம்:

மரம் தான் மரம் தான் எல்லாம் மரம்தான்

 மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்

      சூரிய ஒளி, மழை, தாவரம், காற்று இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல், | குளிர்சாதனப்பெட்டி பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது ஒவ்வொருவரின் கடமையாகும் வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில் மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும்.

மரமும் மழையும் வரமும் உயிரும்:

'விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

                                              உள்நின்று உடற்றும் பசி'

      ஒவ்வொரு மரமும் பல்லாயிரம் உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம் 'ஆகையால், பசி யின்றி வாழவும், தானம் தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர் அவசியமாகிறது.காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதும்,நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாகும்.

முடிவுரை:

      இயற்கைவளங்கள் தொடர்ந்து மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என அறிவியல் அறிஞ்சர்கள் எச்சரிக்கின்றனர்.மாசில்லா உலகம்; நோயில்லா பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி. மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம்.

3. முன்னுரை-உழவே தமிழர் பண்பாட்டு மகுடம்- உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்- சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்-முடிவுரை.  கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.

தலைப்பு : உழவெனும் உன்னதம்

முன்னுரை:

ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே

        என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில் புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

உழவுத் தொழிலும் உழவர்களும்:

நித்தமும் உழவே அவன் நினைப்பு

              நெற்றி வியர்வை சிந்திட அவன் உழைப்பு

      உழவுத்தொழில் உழுதல், சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை செய்தல் எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது.

தமிழர் வாழ்வில் உழவு

தமிழனின் உதிரத்தில் கலந்தது உழவு

        உழவன் இன்றி உலகோர்க்கு ஏது உணவு?”

       பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில் அந்நிலங்களில் வரகு சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை முதலியவற்றையும் விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டனர்.

இலக்கியங்களில் உழவுத் தொழில்:

                 ”உழவர்கள் உழுத உழவினை நல்லேர் நடந்த நகைசால் விளை வயல்'

     என்கிறது சங்க இலக்கியம். 'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன

உழவின் சிறப்பு:

       உழவு அனைத்துத் தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை தானியக் குதிர்கள் மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.' உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி' எனும் வள்ளுவர் வழி இதனை அறியலாம்.

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்:

        உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம் வணங்கிப் போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும்.

முடிவுரை:

      'சுழன்றும் ஏர்பின்னது உலகம்' என்கிறார் வள்ளுவர். 'கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்கிறார் மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம் அனைவருடைய கடமையாகும். இயற்கையை வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம்.

4) குமரிக்கடல் முனையையும், வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவ திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டுசான்றோர் வளர்த்த தமிழ்என்ற தலைப்பில் கட்டுரை வரைக.

தலைப்பு : சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:

                 தமிழே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!"

    என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

கன்னித்தமிழ்:

முந்தை மொழிகளில் மூத்தவளே

    என் மூளை நரம்பினை யாத்தவளே

     தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் தொடங்கி,தற்கால உரைநடை மற்றும் துளிப்பா வரை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இலக்கிய வடிவங்களில்,பல்வேறு பொருட்களைக் கொண்டு, எண்ணிலடங்கா நூல்களை இயற்றி,தமிழன்னைக்குச் சூட்டி,தமிழ் மொழியைக் கன்னித்தமிழாய் வைத்திருப்பதற்கு தமிழராகிய நாம் பெருமைப்பட வேண்டும்.

தமிழன்னைக்கு எழில் சேர்க்கும் சிற்றிலக்கிய வடிவங்கள்:

    தமிழகத்தில், நாயக்கர் ஆண்ட காலப்பகுதியை சிற்றிலக்கிய காலம் என்பர். ஏனெனில், அக்கால கட்டத்திலேயே சிற்றிலக்கிய வடிவங்கள் பல உருவாகி, நூல்கள் தோன்ற ஆரம்பித்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை பிள்ளைத்தமிழ், சதகம், பரணி, கலம்பகம், உலா அந்தாதி, கோவை முதலான சிற்றிலக்கிய வடிவங்கள் ஆகும்.

பிள்ளைத்தமிழ்:

குழவி மருங்கினும் கிழவதாகும்   - தொல்காப்பியர்

     கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது.குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மற்றும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஒப்பற்ற பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் ஆகும்.

சதகம்:

    நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும் கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும்.

பரணி:

                     "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி"

       என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர் நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும்.

கலம்பகம்:

      18 உறுப்புகளைக் கொண்டு, அகம் புறம் என இரண்டும் கலந்து பாடுவது கலம்பகம் ஆகும்.  பல்வேறு பாவினங்கள் கலந்துபாடுவது கலம்பகம்.கலம்பகம்என்பதில்,கலம் என்பது பன்னிரண்டையும், பகம் என்பது ஆறையும் குறிக்கும். நந்திக்கலம்பகம் முதற் கலம்பகம் ஆகும்.

உலா:

                      ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப"

    இதனை தொல்காப்பியம் என்று குறிப்பிடப்படுகிறது. மன்னர்கள் உலா வரும்போது ஏழு பருவ மகளிரும், அவரைக் கண்டு அவர் மீது பற்று கொண்டு மயங்குவதாக பாடுவது உலா. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கயிலாய ஞானஉலா தமிழில் தோன்றிய முழுமை பெற்ற முதல் உலா நூலாகும்.

அந்தாதி:

     அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும்.

கோவை:

       பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை நூலாகும்.

முடிவுரை:

        "வீறுடை செம்மொழி தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும்

5) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்றை எழுதி தலைப்பு தருக. முன்னுரை- தமிழன் அறிவியலின் முன்னோடி- விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்- விண்ணியல் அறிவில் நமது கடமை- முடிவுரை.

தலைப்பு: விண்ணியல் அறிவு (விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்)

முன்னுரை:

எங்களுக்கு நிலாச்சோறு சாப்பிடவும் தெரியும்

நிலாவுக்கே போய் சோறு சாப்பிடவும் தெரியும்

      தமிழர் அறிவியலை நான்காம் தமிழாகக் கொண்டு வாழ்ந்தனர். அதற்கு எண்ணற்ற சான்றுகள் இருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழரின் விண்ணியல் அறிவாகும்.இன்றளவில் நிகழ்த்தப்பெறும் பல விண்ணியல் ஆய்வுகளுக்கு, பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற கருத்துக்கள் முன்னோடியாகத் திகழ்வதை யாராலும் மறுக்க இயலாது.

தமிழன் அறிவியலின் முன்னோடி:

       தமிழர் பழங்காலத்தில் தங்கள் வாழ்வியலோடு அறிவியலையும் இணைத்துக் கொண்டவர்கள்.சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன. பெருவெடிப்புக் கொள்கையை பற்றி இன்றைய அறிவியல் கூறும் கருத்துகளை சங்ககால இலக்கியங்களில் நமது முன்னோர்கள் கூறியிருப்பது வியப்பான ஒன்று.

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

                                                       கருவளர் வானத்து இசையில் தோன்றி"

      எனத்தொடங்கும் பரிபாடலில் புலவர் கீரந்தையார் அண்டத்தின் தோற்றம் குறித்து, இன்றைய அறிவியல் கூறும் கருத்துக்களில் அனைத்தையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 ல் நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்பதைக் கண்டறிந்தார்.ஆனால் 1300ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகர் தான் இயற்றிய திருவாசகத்தில், திருஅண்டப் பகுதியில் 100 கோடிக்கும் மேலான பால் வீதிகள் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

கைகளை நீட்டிப்பார் ஆகாயம் உன்கைகளில்

            முயற்சிகளைச் செய்துபார் ஆகாயம் உன் காலடியில்

      விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

           1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம்செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார்.

நமது கடமை:

        அனைத்துக் கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது. விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும். விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும்  அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது. அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும்

முடிவுரை:

       "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்" என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.

6) பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதுக குறிப்பு:நூல் தலைப்பு- நூலின் மையப் பொருள்- மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு- நூலாசிரியர்.

நூல் தலைப்பு: கனவெல்லாம் கலாம்

      அன்று இந்தியாவை அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான் இந்த" கனவெல்லாம் கலாம்என்ற நூலாகும். இதுவே இந்நூலின் தலைப்புமாகும்.

நூலின் மையப் பொருள்:

        இந்நூலாசிரியர் மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய நூல்" கனவெல்லாம் கலாம்

வெளிப்படும் கருத்து:

     மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப் பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ் பெற்றார் என்பதே உண்மை.

நூல் கட்டமைப்பு:

     நூலாசிரியர் இந்நூலில்,1. காணிக்கை கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள், 3.கவிதை மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித் தொகுத்துள்ளார். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே.

சிறப்புக் கூறு:

      பொதுவாக தொகுப்பு நூலை உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய செயலாகும். தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது.

நூலாசிரியர்:  தமிழ்த்தேனீ முனைவர். இரா.மோகன்

7) நீங்கள் சென்று வந்த அரசுப் பொருட்காட்சியில், அறிவிப்பு, அமைப்பு, சிறு அங்காடிகள், நிகழ்த்தப்பட்ட கலைகள், பேச்சரங்கம்,அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளக்கங்கள் போன்றவற்றைக் குறிப்புகளாகக் கொண்டு ஒரு கட்டுரை வரைக.

தலைப்பு: அரசுப் பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வு

முன்னுரை:

    குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்கு தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் அரசு பொருட்காட்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:

     மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த அரங்குகள் எங்கெங்கே அமைக்கப்பட்டுள்ளன? துறைசார்ந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

      பொருட்காட்சியின் தொடக்கத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் பொருட்காட்சியின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. அந்த வரைபடம் பொருட்காட்சி அமைப்பை மக்களுக்கு எளிதில் விளக்குவதாக அமைந்திருந்தது. மேலும் பொருட்காட்சியின் அமைப்பு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

     பொருட்காட்சியில் விளையாட்டு பொருள்கள், தின்பண்டங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனங்கள், சமையல் கலன்கள், நெகிழிப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

      பொருட்காட்சியின் உள்ளே இருந்த பொழுதுபோக்கு அம்சங்களில் குறிப்பிடத்தக்கது நிகழ்கலை ஆகும். அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது.

பேச்சரங்கம்:

        இலக்கிய விரும்பிகளுக்கு விருந்தளிக்கும் வகையில், பொருட்காட்சியில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். பொருட்காட்சிக்கு வந்த மக்களில் பலர் மெய்மறந்து பேச்சாளர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்றனர். நாலும் என் குடும்பத்தினரும் கூட பேச்சி அரங்கத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டு விட்டு வந்தோம்.

அரசின் நலத்திட்டங்கள்:

      பொருட்காட்சிக்கு முத்தாய்ப்பாக அரசின் நலத்திட்டங்களை விளக்கும் துறைவாரியான அரங்குகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின.அந்த அரங்குகளில் அந்தந்த துறைசார்ந்த வஊழியர்கள் அவர்களது பணிகளையும், மக்களுக்காக அவர்கள் ஆற்றும் சேவைகளையும் விளக்கும் வகையில் அந்த அரங்குகளை அமைத்து இருந்தனர்.

முடிவுரை:

         இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

8) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு தருக: முன்னுரை- சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு- சாலை விதிகள்- ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம்- முடிவுரை.

தலைப்பு : சாலை பாதுகாப்பு

முன்னுரை:

      சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:

       சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

சாலை விதிகள்:

      சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

v  சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

v  போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.

v  சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.

v  வாகனஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

முடிவுரை:

     "சாலைவிதிகளை மதிப்போம்

      விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்"

     என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.

9) உங்களைக் கவர்ந்த எவரேனும் ஓர் அறிஞர் அல்லது அரசியல் தலைவர் தம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைத் தாமே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக. அப்துல் கலாம்

முன்னுரை:

      நான் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இராமேசுவரத்தில் ஜைனுல்லா மரைக்காயர்-ஆஷிமா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தேன்.என் வாழ்க்கை வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

இளமைக்காலம்:

     என்னுடைய பள்ளிப் படிப்பை இராமேசுவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி மூலம் தொடங்கினேன்.அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்டிருந்தேன். பத்திரிகை விற்பனை செய்து என்னுடைய உறவினருக்கு உதவி செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை என் படிப்புக்காகச் செலவு செய்தேன். பள்ளிப் பருவத்தில் கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இதுவே பின்னாளில் நான் விமானத்தைவடிவமைக்கத் தூண்டுகோலாக இருந்தது.

கல்லூரிப்படிப்பு:

     1954 ம் ஆண்டு இயற்பியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.1955 ம் ஆண்டு சென்னையில் உள்ள எம்.ஐ.டியில் விண்வெளி பொறியியல் படிப்பை முடித்தேன்.

விமான வடிவமைப்பு:

     எம்.ஐ.டியில் படித்து முடித்த பின் உள்நாட்டு தொழில்நுட்ப அறிஞர்களின் உதவியுடன் உள்நாட்டில் கிடைத்த பொருள்களைக் கொண்டு நந்தி என்ற விமானத்தை வடிவமைத்து அதை இயக்கியும் காட்டினேன்.

பணி:

       1983 ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவராகவும் பாதுகாப்பு அமைச்சக அறிவியல் ஆலோசகராகவும் பொறுப்பேற்றேன்.

சாதனைகள்:

ü  இந்தியாவில் முதல்முறையாக 1974ஆம் ஆண்டு "சிரிக்கும் புத்தர்" என்ற திட்டத்தில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்ந்தது.அத்திட்டத்தில் பங்கேற்ற 60 விண்வெளி பொறியியல் அறிஞர்களில் நானும் ஒருவனாக இருந்தது எனக்குப் பெருமை அளிக்கிறது.

ü  1980ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எஸ்எல்வி-3 என்ற ஏவுகணையைப் பயன்படுத்தி ரோகிணி-1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினேன்.

ü  1998 ஆம் ஆண்டு "ஆபரேஷன் சக்தி" என்ற திட்டத்தின் மூலம் பொக்ரான் அணு வெடிப்புச் சோதனையில் முக்கிய பங்காற்றினேன்..2002 முதல் 2007 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் இருந்து உள்ளேன்.

முடிவுரை:

        நான் அறிவியல்மீது பற்று கொண்டிருந்த அளவுக்கு, தாய்மொழி மீதும் பற்று கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்தநூல் திருக்குறள் ஆகும்.மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என்பதில் எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு.இளைஞர்களுக்கு நான் கூற விரும்புவது, "கனவு காண்பதை சிந்தனை வடிவம் ஆக்குங்கள்,பின் செயலாற்ற முனையுங்கள்". 

பதிவிறக்கம் செய்ய

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை