மறைமலையடிகள்-வாழ்க்கை வரலாறு
பெயர் : மறைமலை அடிகள்
இயற்பெயர் : வேதாசலம்
பிறப்பு : 15-07-1876
இறப்பு : 15-09-1950
பெற்றோர் : சொக்கநாதர்,சின்னம்மையார்
இடம் : திருக்கழுக்குன்றம், தமிழ்நாடு
புத்தகங்கள் : அறிவுரைக் கோவை, கருத்தோவியம், உரைமணிக் கோவை, தொலைவில் உணர்தல், சாகுந்தல நாடகம், தமிழர் மதம், வேளாளர் நாகரிகம், பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
வகித்த பதவி : தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.
வரலாறு
மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் மாலை 6.35க்கு திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவர் தம்முடை பிள்ளைகள் திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப்பெயர்களைத், திருஞான சம்பந்தம்: அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் : மணிமொழி, சுந்தரமூர்த்தி: அழகுரு, திரிபுரசுந்தரி : முந்நகரழகி எனத் தனித்தமிழாக்கினார்.
மறைமலைஅடிகள், நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால்,நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். சைவ சித்தாந்த சண்டமாருதம் என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.
சென்னைக்கு வந்த பின்னர்க் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி 22.04.1912-இல் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் பொதுநிலைக் கழகம் எனப் பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்
மறைமலை அடிகள் ‘பல்லாவரம் முனிவர்’ என்றும் குறிப்பிடப்பட்டார்.
இவர் காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோன்மணீயம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரைவேலர், திரு. வி. கலியாணசுந்தரனார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், ‘தமிழ் தாத்தா’ உ. வே. சாமிநாதையர், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச. வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன நாராயணசாமி, சைவசித்தாந்த சண்டமாருதம் என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர், என்று பலர் வாழ்ந்த காலம்.