பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பெயர் : பெருஞ்சித்திரனார்
பிறப்பு : 10-03-1933
இறப்பு : 11-06-1995
பெற்றோர் : துரைசாமியார், குஞ்சம்மாள்
இடம் : சமுத்திரம், சேலம்
புத்தகங்கள் : நூறாசிரியம் பள்ளிப் பறவைகள், நெருப்பாற்றில் எதிர் நீச்சல், கனிச்சாறு, கொய்யாக் கனி, தமிழீழம், இளமை உணர்வுகள், இளமை விடியல், உலகியல் நூறு, எண் சுவை எண்பது, ஐயை (பாவியம்), ஓ! ஓ! தமிழர்களே, கற்பனை ஊற்றுக் கட்டுரைகள், கழுதை அழுத கதை
வகித்த பதவி : எழுத்தாளர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். தமிழரசன் போன்ற தமிழ்தேசிய தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே. 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றபடுகிறது. தமிழ்தேசிய தந்தையாக இன்று தமிழர்களால் போற்றப்படுகிறார்.
வரலாறு
பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம், சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் வைத்துக் கொண்டார்.
பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.
பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். குழந்தை என்னும் பெயரில் கையெழுத்து ஏட்டைத் தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் மலர்க்காடு என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.
பெருஞ்சித்திரனார் அவர்களின் குடும்பம் தமிழின வரலாற்றில் தவிர்க்க முடியாத குடும்பமாக திகழ்கிறது. முதுபெரும்புலவர் (இறைக்குருவனார், தமிழ்மொழியின் தொன்மையை ஆய்ந்து உலகுக்குணர்த்திய சொல்லாய்வறிஞர்)ப.அருளியார் (தமிழ்வழிப்பள்ளியை முதன்முதலில் உருவாக்கிய திருவாட்டி)இறை.பொற்கொடி (பகுத்தறிவுக் குமுகாயம் ஆக்கம் செய்யும் பெண்ணியப்போராளி தழல்).தேன்மொழி, பேராசிரியர்.மா.பூங்குன்றன், முனைவர்.கி.குணத்தொகையன், அறிஞர்.ஆறிறைவன், தமிழ்த்தேசியப்போராளி மா.பொழிலன், வழக்கறிஞர்.அங்கயற்கண்ணி, வரலாற்றறிஞர் தெள்ளியன் உள்ளிட்ட குடும்பமே இனத்தையும் மொழியையும் வழிநடத்துகின்றது. தென்மொழி, தழல், தமிழ்நிலம், மாணவர்களம் என்ற இதழ்களும் பல்வேறு இயக்கங்கள், கல்வி அறக்கட்டளைகளும் இக்குடும்பத்தால் நடைபோடுகிறது.
பெருஞ்சித்திரனார் தன் மொழிவழி முன்னோடி இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தவர்களிடமிருந்து தீவிரமாக வேறுபடும், முரண்படும் புள்ளி அவரின் அரசியலாகும். தமிழ்நாடு இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்நாடு என்பதாக தனித்தேசமாக உருவாகவேண்டும் என்பது பெருஞ்சித்திரனாரின் அரசியல் நிலைப்பாடாகும். அவர் தனது தென்மொழி இதழின் முதல் இதழிலிருந்து இதனை வலியுறுத்திவந்தார்.