7 TH STD TAMIL-MODEL LESSON PLAN -FEBRUARY WEEK 1

 ஏழாம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு


வகுப்பு: 7.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: கவிதைப்பேழை (விருந்தோம்பல்)

நாள் : பிப்ரவரி முதல் வாரம்

(01-02-2022 முதல் 05-02-2022 வரை)


1.அறிமுகம்:

  • ”உங்கள் வீட்டுக்கு யாரேனும் விருந்தினர் வந்தால் நீங்கள் எப்படி எல்லாம் அவர்களை விருந்தோம்புவீர்கள்?” என்ற வினாவினை ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டு,அவர்கள் ஒவ்வொருவரையும் விடை கூறச்செய்து,விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணரவைத்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

  • மாணவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களுக்கு தெரிந்த பழமொழிகளைக் கூறச் செய்து அதன் மூலமும் பாடத்தை அறிமுகம் செய்தல்.

2.படித்தல்:       

           செய்யுள் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

3.மனவரைபடம்:

4.தொகுத்தலும்,வழங்குதலும்:

  • தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும். தமக்கு இல்லாவிட்டா லும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. கடையெழுவள்ளல்களுள் ஒருவர் பாரி. அப்பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறும் பாடலை அறிவோம்.

  • மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்த னர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம். 

  • இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ”ஒன்றாகு முன்றிலோ இல்” என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.      

5.வலுவூட்டுதல்:

  •  ”உங்களது இல்லங்களில் விருந்தோம்பலுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்?” என்ற வினாவுக்கு ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டு,மாணவர்கள் கூறும் விடைகளுடன் பண்டைய தமிழரின் விருந்தோம்பல் செயல்பாடுகளை ஒப்பிட்டு  மாணவர்களின் கற்றலுக்கு வலுவூட்டுதல்.

6.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  1. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது எது?

  2. நமது பாடப் பகுதி எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?

  3.  பழமொழி நானூறு என்னும் நூலை இயற்றியவர் யார்?

  4. மாரி என்பதன் பொருள் என்ன?

  5. முன்றுரை அரையனார்எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?

7. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

8.எழுதுதல்:   

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

  • மனப்பாட பாடலை படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்

9.தொடர்பணி:

  •  கிராமங்களில் கூறப்படும்  பழமொழிகளைத் தொகுத்து வரச்செய்தல்.

  •  சில ஆங்கிலப் பழமொழிகளைத் தந்து, அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து வரச்சொல்லுதல்.    

  கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •  படவீழ்த்தி

  • கணிப்பொறி

  • பாடப்புத்தகம்

  • கரும்பலகை  

          






 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை