கிறித்துவமும் தமிழும்
கிறித்துவம் தமிழ் உலகிற்கு எண்ணற்ற தமிழறிஞர்களை அள்ளிக் கொடுத்துள்ளது.அவர்களின் தமிழ்ப்பணி அளப்பரியதாகும்.மேலை நாடுகளில் இருந்து,மதம் சார்ந்த பணிகளுக்காகத் தமிழகம் வந்தவர்களும்,தமிழைக் கற்றுணர்ந்து ,தமிழின் மீது தீராக்காதல் கொண்டவர்களாக மாறினர்.அவர்களுள் சில குறிப்பிடத்தக்க தமிழறிஞர்களைப் பற்றி இங்கு காண்போம்.
வீரமாமுனிவர்(1680-1747):
இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஆவார். இவரது இயற்பெயர் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்பதாகும். மதுரை தமிழ்ச் சங்கத்தினர் இவருக்கு கொடுத்த ”தைரியநாதர்” என்ற பெயரைத் தூய தமிழாக்கி வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.இவருக்குத் தமிழ் கற்பித்த தமிழறிஞர் சுப்ரதீபக் கவிராயர் ஆவார்.
வீரமாமுனிவர் எண்ணற்ற நூல்களை தமிழுக்காகப் படைத்து அளித்துள்ளார். தன்னுடைய முப்பதாவது வயதில் தமிழகத்திற்கு வந்தவர் 37 ஆண்டுகள் தமிழ்த்தொண்டு செய்தார்.இவர் இயற்றிய ”தொன்னூல் விளக்கம்” என்ற ஐந்திலக்கண நூல் குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படுகிறது.
மேலை நாட்டிலிருந்து வந்து தமிழ் கற்று,தமிழின் முதல் அகராதியான சதுரகராதியைத் தொகுத்து அளித்தார்.அதுமட்டுமில்லாமல் தமிழின் முதல் நகைச்சுவை கதை தொகுப்பாகிய பரமார்த்த குரு கதை என்பது இவர் இயற்றியதாகும்.இவர் இயற்றிய தேம்பாவணி என்ற காப்பியமானது, இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைப்பற்றியது.காப்பியம்,இலக்கணம், சிற்றிலக்கியம், அகராதி என தமிழின் பல பரிமாணங்களிலும் இவருடைய பங்களிப்பு அளப்பரியது.
இவர் திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
ஜி.யு.போப்(1820-1908):
இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர் ஆவார்.இவர் தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு வழிகோலியவர் ஆவார்.திருக்குறள், நாலடியார், திருவாசகம், சிவஞானபோதம், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை முதலிய எண்ணற்ற நூல்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்துள்ளார்.இவரது திருவாசக மொழிபெயர்ப்பு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
நீதி நூல்களில் இருந்து பாடல்களைத் தொகுத்து அதற்கு தமிழ்ச் செய்யுட் கலம்பகம் என்று பெயரிட்டு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.இவர் தமிழ் மீது கொண்ட அதீத பற்றின் காரணமாக, தம் கல்லறையில் ”ஒரு தமிழ் மாணவன்” என்று பொறிக்க வேண்டும் என்று விரும்பினார்.
கால்டுவெல்(1815-1891):
கால்டுவெல் அயர்லாந்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் ஆவார்.இவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்குத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டவர்.திராவிட மொழிகளை இனங்கண்டு திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்றைப்பற்றிச் சொல்லத் தொடங்கியவர்.இவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதினார்.திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் எனப்பிரித்து ஆய்ந்தார்.தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று உலகறியச் செய்த முதல் மேலைநாட்டவர் இவர்.
இவருக்குச் சென்னை பல்கலைக்கழகம் இலக்கிய வேந்தர்,வேத விற்பன்னர் முதலிய பட்டங்களை வழங்கியது.
சீகன்பால்கு(1663-1719):
சீகன்பால்கு ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர் ஆவார். இவருக்குத் தமிழ் கற்பித்தவர் எல்லையா என்பவர் ஆவார்.தரங்கம்பாடியில் இந்தியாவின் முதல் அச்சுக் கூடத்தை நிறுவினார்.பொறையார் என்னுமிடத்தில் காகிதத் தொழிற்சாலையை நிறுவினார். இவர் நிறுவிய அச்சுக்கூடத்தில் முதன்முதலில் அச்சேறிய இந்திய மொழி தமிழ். தம்பிரான் வணக்கம் என்னும் நூலே இங்கு முதன் முதலில் அச்சிடப்பட்டது.
இவர் பைபிளைத் தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்தார்.இவர் முதன் முதலில் தமிழ் புத்தகங்களை அச்சிட்டவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.
ராபர்ட்- டி -நோபிலி(1577-1656):
ராபர்டோ டி நொபிலி இத்தாலி நாட்டைச் சார்ந்தவர் ஆவார்.” ராஜ சன்யாசி என்று தன்னை அழைத்துக் கொண்டார்.” இவரைத் தத்துவ போதகர் என்றும் அழைப்பர்.
எல்லீஸ்:
எல்லீஸ் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர் ஆவார்.இவருக்குத் தமிழ் கற்பித்தவர்கள் சாமிநாத பிள்ளை, இராமச்சந்திர கவிராயர் முதலியோர் ஆவர்.இவர் சென்னை கல்வித் சங்கத்தை நிறுவினார்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை(1826 -1889):
தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர்.ஆகையால் தமிழ் நாவலின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.இவர் இயற்றிய பெண்மதி மாலை என்னும் நூல் பெண்ணின் பெருமை பேசக் கூடிய மிகச் சிறந்த நூலாகும்.
ஹெச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை (1827-1900):
இவர் கிறிஸ்தவக் கம்பர் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஜான் பனியன் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்ற நூலைத் தழுவி இரட்சண்ய யாத்திரிகம் என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார்.இவர் எழுதிய இரட்சணிய மனோகரம் என்ற நூல் கிறித்தவர்களின் தேவாரம் என்று போற்றப்படுகிறது.
கிறித்தவம் வளர்த்த தமிழ்
சிறப்பு வினாடி வினாவில் பங்கேற்று
மின்சான்றிதழ் பெற👇👇