7.ஆம் வகுப்பு-தமிழ்-கட்டுரை மற்றும் கடிதங்கள்
மூன்றாம் பருவம்
இயல்-1
என்னைக் கவர்ந்த நூல்(திருக்குறள்)
முன்னுரை :
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
என்பார் தம் தமிழ்க்கவி
பாரதியார். வள்ளுவனைத் தந்தது தமிழகம். அந்த வள்ளுவன் தந்ததோ திருக்குறள் என்னும்
உலகப் பொதுமறை. நாடு, மொழி,இனம்,சாதி, சமயம், காலம் முதலிய
வேறுபாடுகளின்றி உலக மக்களனைவராலும் ஏற்றுப் போற்றத்தக்க அறநெறிகளைக் கூறும் நூல்
திருக்குறளாகும்.
திருக்குறளின் அமைப்பும் பெருமையும் :
திருக்குறள் அறத்துப்பால்,
பொருட்பால், இன்பத்துப்பால் என
முப்பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் 1330 குறள்
வெண்பாக்களையும் உடையது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஏற்பட்டது. பதினெண்கீழ்க்கணக்குநூல்களுள்ஒன்றுதிருக்குறள். 'எல்லாப் பொருளும் இதன்பாலுள' என நாகனாரும்,
'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்'என ஔவையாரும் புகழும்நூல்
திருக்குறள்.
உலகப் பொதுமறை :
.
திருக்குறள் உலக மக்கள் அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அதற்குச் சான்று, உலகமொழிகள் பலவற்றுள்ளும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுதான். திருவள்ளுவர்
தம் திருக்குறளில் உலகோர் அனைவரும் பின்பற்றத்தக்க நெறிகளையே கூறியுள்ளார்.கல்வி, கேள்வி, ஒழுக்கம்,
அடக்கம், வாய்மை, பொறுமை,
ஈகை முதலிய பண்புகள் உலகோர் அனைவருக்கும் பொதுவானவை.
கருத்துக் களஞ்சியம் :
. 'மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்' என அறத்திற்கு விளக்கம் தந்து, “அறத்தான் வருவதே இன்பம்” அதனால் “அன்றறிவாம் என்னாது
அறம் செய்க” என்றார்.“ஒழுக்கம்
விழுப்பம் தரலான்”, “பரிந்தோம்பிக் காக்க”
என்றார்.“நன்றி மறப்பது நன்றன்று”,“வறியார்க்கொன்று ஈவதே ஈகை”,
“மெய்ப்பொருள்
காண்பது அறிவு”
என்பவை மனித வாழ்வை உயர்த்தும் அருள்மொழிகளாகும்.
முடிவுரை : .
இறைவன்
மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன்
மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்,திருக்குறள் உலக மக்களுக்காகப் படைக்கப்பட்டது. ஆயிரத்து முந்நூற்று
முப்பது அருங்குறளையும் கற்போம்! கற்றபடி நிற்போம்!
இயல்-2 ஒற்றுமையே
உயர்வு
முன்னுரை:
. ஒற்றுமையோடு கூடிய உயிரினங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி அடையும்.
ஒற்றுமையில்லாத உயிரினங்கள் எவ்வளவு வலிமை உடையனவாய் இருந்தாலும், அவை வாழ்க்கைப் போரில் தோல்வி அடையும். இவ்வுண்மையை உயிரினங்கள் பற்றிய
உண்மையை ஆய்வோர் உணர்வர். வாழ்க்கைப் போரில் வெற்றிகாண விரும்புவோர் ஒற்றுமையைப்
பேணுவாராயின், செயற்கரியவற்றைச் செய்து பெரும்புகழ் அடைவார்.
ஒற்றுமை உண்டாக வழி:
. ஒற்றுமை என்னும் எழில் மாளிகையை அன்பு என்னும் அடிப்படை
அமைத்தும், ஒருவருக்கொருவர் உதவுதல் என்னும் செஞ்சாந்திட்
டும், செவ்விய சிந்தனையென்னும் செங்கற்களை அடுக்கியும்
எழுப்ப வேண்டும் அப்பொழுதுதான் ஒற்றுமை உருவாகும். மற்றும் பிறர் குற்றங்களை
மன்னித்தல், கோபங்கொள்ளாமல் பொறுமையுடன் வாழ்தல் ஆகியவை
அம்மாளிகையில் ஒளிவீசவல்ல ஒற்றுமை என்னும் சுடர்விளக்கின் உறுப்புக்களாகும்.
ஒற்றுமையின் பயன்கள்:
. . இல்வாழ்வின்
ஒற்று மையே ஊரின் ஒற்றுமையாய் நாட்டின் ஒற்றுமையாய் உலகின் ஒற்றுமையாய் வளர்ச்சி
அடையும். அவ்வளர்ச்சியிலே கல்வியின் மாண்பைக் காணலாம்; கலையின் நலத்தைக் காணலாம்;
செல்வத்தின் செழிப்பைக் காணலாம்; இன்பத்தின்
எழிலைக் காணலாம்; வீரத்தின் பொலிவைக் காணலாம்; வெற்றியின் விளைவைக் காணலாம்.
ஒற்றுமையின்மையால் விளையும் கேடுகள் :
. ஒற்றுமை யின்மையால் விளைந்த கேடுகள் மிகப்பலவாகும். பண்டைத்
தமிழ் மன்னர்கள் அழிந்ததற்குக் காரணம் யாது? ஒற்றுமை இன்மையால் அல்லவா? மாபெரும் இந்தியா சிறிய பிரிட்டனிடம் சிக்கியதற்கு இதுவன்றோ காரணம்.
தொழில் வளமும் பொருள் வளமும் ஏன் நசுங்கின? ஒற்றுமையோடு
உழைக்கும் மனப்பாண்மை இல்லை. ஒற்றுமையோடு பாடுபடும் செயல்திறன் இல்லை. எனவே,
துன்பம் மிகுந்தது. இன்பம் குறைந்தது. முடிவுரை:
.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு'' என்னும் பாரதி
பாடல் நமக்கு ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் காவியமாகத் திகழ்கின்றது. ஒன்றேகுலம்
ஒருவனே தேவன்' என்ற உயரிய குறிக்கோள் உலக ஒற்றுமையைக்
கட்டிக்காக்கும் திருமந்திரமாய் நிலவுகின்றது, வான்புகழ்
வள்ளுவர் வழங்கிய திருக்குறள் ஒற்றுமையை வளர்க்கும் தாயுள்ளமாய்த் தொண்டு
புரிகின்றது.
இயல்-3 உறவினருக்குக்
கடிதம்
12,வள்ளுவர் தெரு,
குடந்தை-1.
14-03-2022.
அன்புள்ள தம்பிக்கு,
அன்பு அண்ணன் பூவேந்தன் எழுதும் கடிதம்.நலம்,நலம்
அறிய ஆவல்.நாம் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகியிருப்பினும்,உன்னை அவ்வப்போது நினைத்துக்கொண்டுதான்
இருக்கிறேன்.சென்ற ஆண்டு உங்கள் ஊரில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் நான் கலந்துகொண்டு
மகிழ்ந்ததை ,எண்ணி எண்ணி இன்புறுகிறேன்.அதேபோல் இந்த ஆண்டு எங்கள் ஊரில் நடைபெறும்
சித்திரைத் திருவிழாவிற்கு,நீ நிச்சயம் உனது குடும்பத்தினருடன் வர வேண்டும். இதுவே
எங்கள் குடும்பத்தில் அனைவரது விருப்பமாகவும் உள்ளது. மற்றவற்றைப் பற்றி நேரில் உரையாடலாம்.
இப்படிக்கு ,
உனது அன்பு அண்ணன்,
சா.
பூவேந்தன்.
உறைமேல் முகவரி:
த.எழில்மதியன்,
5,கன்னல் நகர்,
மதுரை-1