10 TH STD TAMIL URAIPATHIYAI PADITHU VITAI ALITHTHAL VINAKAL

   10. ஆம் வகுப்பு - தமிழ்

பாடலைப்படித்து விடையளித்தல்

  அன்பார்ந்த மாணவச் செல்வங்களுக்கும் தமிழ் ஆசிரியர் பெருமக்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் வணக்கங்கள். பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தயாரிப்புக்காக தமிழ் பாடத்திற்கான பல முக்கியப் பதிவுகள் நமது வலைதளத்தில் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளன. ஒரு மதிப்பின் வினா முக்கிய குழுவினார்கள் நெடு வினாக்கள் துணைப்பாட கட்டுரைகள் விரிவான கட்டுரைகள் பொது கட்டுரைகள் உள்ளிட்ட பதிவுகள் தனித்தனியே ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளன. அவ்வகையில் இப்பதிவில், உரைப் பத்தியைப் படித்து விடை அளித்தல் (மூன்று மதிப்பெண் வினா விடை) பகுதிகள் அரசுப் பொதுத்தேர்வு வினாத்தாட்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாள்கள் மற்றும் பள்ளிக்கல்வி துறையால் நடத்தப்பெறும் அரையாண்டு மற்றும் திருப்புதல் வினாத்தாள்கள் ஆகிய வினாத்தாள்களிலிருந்து முக்கிய வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 17 பயிற்சிகள் இப்பதிவில் விடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன .அவை பிடிஎப் வகையில் பதிவிறக்கம் செய்யும் வகையிலும் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

1.     தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிற நாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும், சில்வகைப்பட்டவனவாகவும் ருக்க, தமிழ்நாட்டிலுள்ளவையோ பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதுமையை எடுத்துக் கொள்ளின் அதில் சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை. வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.

(அ) தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது எதனால் விளங்கும் ?

(ஆ) கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக.

(இ) தமிழ்நாட்டு நெல்லின் வகைகளை எழுதுக.

2.     அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. அறம் கூறு அவையம் பற்றி 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்கிறது புறநானூறு. உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது; அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.

(அ) அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தவை எவை ?

(ஆ) அவையம் பற்றி புறநானூறு கூறுவது யாது ?

(இ) மதுரையில் இருந்த அவையம் எப்படி இருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது ?

3.    பருப் பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகி, ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது.

(அ) பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

(ஆ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது ?

(இ) பெய்த மழை இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

4.    "போலச்செய்தல்" பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று. மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரை வடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

(அ) எப்பண்புகளைப் பின்பற்றிப் பொய்க்கால் குதிரையாட்டம் நிகழ்த்தப்படுகிறது ?

(ஆ) பொய்க்கால் குதிரையாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?

(இ) யாருடைய காலத்தில் இது தஞ்சைக்கு வந்தது ?

5.   ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன. புள்ளி விவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம், இரண்டாமிடம் மலையாளம். மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.

(அ) ஜெர்மனியில் ஓர் ஆண்டில் எத்தனை நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன ?

(ஆ) தமிழ் நூல்கள் எந்த மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ?

(இ) மொழிபெயர்ப்பின் பயன் என்ன ?

6.     தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

அ. ஆவூர் மூலங்கிழாரின் போர் அறம் யாது?

ஆ. போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?

இ. யாருக்கெல்லாம் தீங்கு வராதவண்ணம் போர் புரிய வேண்டும்?

7.      தற்போது வெளிவருகிற சில உயர்வகைத் திறன்பேசியின் ஒளிபடக் கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. கடவுச்சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது. உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது. இன்றைய தொழில்நுட்பம். செயற்கை நுண்ணறிவு, படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.

அ. திறன்பேசியைத் திறக்கும் பழைய முறைகள் எவை?

ஆ. திறன்பேசியில் படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது?

இ. உயர்வகைத் திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எது?

8.      அம்மானை பாடல்கள், சித்தர் பாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக நான் இலக்கிய அறிவு பெற்றேன். அப்போது அவர்கள் வெளியிடும் சிறந்த கருத்துகளை ஏடுகளில் குறித்து வைத்துக் கொள்வேன். யான் முறையாக ஏட்டுக்கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக் கேள்வி ஞானத்தைப் பெறுவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டினேன். எனது கேள்வி ஞானத்தைப் பெருக்கிய பெருமை திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே அதிகம் உண்டு என்றெல்லாம் தமது செவிச்செல்வம் பற்றி ம.பொ.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

அ. ம.பொ.சி அவர்கள் கேள்வி ஞானத்தை அதிகமாக யாரிடம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்?

ஆ. ம.பொ.சி அவர்கள் இலக்கிய அறிவினை எவ்வாறு பெற்றார்?

இ. ஏட்டுக்கல்வி பெற இயலாத ம.பொ.சி. அதனை எவ்வாறு ஈடு செய்தார்?

9.    சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன.

அ. பழந்தமிழ் மக்களின் எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணைசெய்கின்றன?

ஆ. நிகழ்கலைகளின் பயன்கள் இரண்டினை எழுதுக.

இ. நிகழ்கலைகள் எப்பகுதி மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாகத் திகழ்கின்றன?

10. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம். இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது. ‘இல்லொழுக்கங் கூறியபகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாகஇடம்பெற்றுள்ளது.

    முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்தஇவர் இயற்றிய நூலே காசிக்காண்டம். இவரின் மற்றொரு நூலானவெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது. சீவலமாறன் என்றபட்டப்பெயரும் இவருக்கு உண்டு. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.

1. காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல் யாது?

2. முத்துக்குளிக்கும் நகரம் எது?             

3. சீவலமாறன் என்பது யாருடைய பட்டப்பெயர்?

11.   1953–54ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லைப் பகுதிகளைக் கேரள(திருவிதாங்கூர்) முடியாட்சியிலிருந்து மீட்கவும் போராடினோம். தமிழக வடக்குதெற்கு எல்லைக் கிளர்ச்சிகளைத் தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்தது தமிழரசுக் கழகம்தான் என்றாலும் அதனை நடத்துகின்ற பொறுப்பை எல்லைப்பகுதி மக்களிடமே விட்டு வைத்திருந்தேன். அவர்களுள் பி.எஸ். மணி, . சங்கரலிங்கம், நாஞ்சில் மணிவர்மன், பி.ஜே.பொன்னையா ஆகியோர் முதன்மையானவர்கள்.

1. தமிழக வடக்குதெற்கு எல்லைக் கிளர்ச்சிகளைத் தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்த அமைப்பு யாது?  

2. தெற்கெல்லைப் பகுதிகளைத் தனவசம் வைத்திருந்த அரசு எது ?

3. இப்பத்திக்குப் பொருந்திய தலைப்பொன்று தருக.

12.       மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகளும் கூட உருவாகியிருக்க முடியாது: ஷேக்ஸ்பியர் இருந்திருக்க முடியாது; கம்பன் இருந்திருக்க முடியாது. இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது. மகாகவியான பாரதியின் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் உலக அளவில் உயரிய விருதுகளும், ஏற்பும் கிடைத்திருக்கும்.

அ) இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதை நூல் எது?

ஆ) இரவீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது எப்போது?

இ) மகாகவியான பாரதியின் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் எவை கிடைத்திருக்கும்?

13.      வாய்மையே சிறந்த அறமாக சங்க இலக்கியங்கள் பேசப்படுகின்றன். வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்று கருத்தை இலக்கியங்கள் கூறுகின்றன. நக்கு ஒரு அதிசய திறவுகோல் என்பார்கள். நாக்கு தான் இன்பத்தின் கதவை திறப்பதும் துன்பத்தின் கதவை திறப்பதுவும் ஆகும். மெய் பேசும் நா மனிதனை உயர்த்துகிறது. பொய் பேசும் நா மனிதனை தாழ்த்துகிறது.

1) எதை சிறந்த அறமாக சங்க இலக்கியம் பேசுகிறது?

2) நா என்பதன் பொருள். யாது?.

3) மனிதனை நா எப்பொழுது தாழ்த்துகிறது?

14.   ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்கிறது திருக்குறள். கல்வியைப் போற்றுவதைப் புறநானூற்றுக் காலத்திலிருந்து தற்காலம் வரை தொடர்கின்றனர் தமிழர் பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல நூல்களை நாடிச் சென்று அறிவு பெற வேண்டும்.

அ) கல்வியைப் போற்றுதல் எக்காலத்தில் இருந்து தொடர்கிறது?

ஆ) நூல்களை நாடிச்சென்று அறிவு பெறுதல் எதனோடு ஒப்பிடப்படுகிறது.

இ) கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் இலக்கியம் எது?

15.     வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும், இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகிறார். உறவினர் வேறு. விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால் 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளார்.

அ) விருந்தினர் என்போர் யாவர்?

ஆ) விருந்து குறித்துத் தொல்காப்பியர் கூறியது யாது?

இ) இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.

16.     உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஒளவையார். இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார். பேகன் மறுமை நோக்கி கொடுக்காதவன் என்கிறார் பரணர். தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் -பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார்.

1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் யார்?

2. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்று பரணர் யாரைக் கூறுகிறார்?

3. குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் எதனைக் குறிப்பிடுகிறார்?

17.  மகாகவி சுப்பிரமணிய பாரதியார், "நீடு துயில் நீக்கப்பாடி வந்த நிலா", 'சிந்துக்குத் தந்தை' என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்: எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்: கவிஞர்: கட்டுரையாளர் : கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்: சிறுகதை ஆசிரியர்: இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன்பாடல்களில் எதிர்த்து எழுதியவர்: குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பாபாட்டு, புதிய ஆத்திச்சூடி என குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்: இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். பாட்டுக்கொரு புலவன் எனப்பாராட்டப்பட்டவர் பாரதியார்.

1) பாட்டுக்கொரு புலவன் எனப்பாராட்டப்பட்டவர் யார்?

2) பாரதியார் பணியாற்றிய இதழ்கள் யாவை?

3)'இப்பத்திக்குப் பொருந்திய தலைப்பொன்று தருக.

பதிவிறக்கம் செய்ய

விடைகளைப் பதிவிறக்க

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை